தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை டிஜிபியாக பணியாற்றி வரும் இவர், இப்போது தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
வாழ்க்கை குறிப்பு:
மகேஷ்குமார் அகர்வால், 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. இவர் சட்டம் பயின்றவர். சொந்த மாநிலம் பஞ்சாப் ஆகும். தந்தையும் வழக்கறிஞர் என்பதால் சட்டம் பயின்று பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். தேனி எஸ்.பி., தூத்துக்குடி எஸ்.பி., 2001-ல் சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர் எனப் பொறுப்பு வகித்த மகேஷ்குமார் அகர்வால், பின்னர் சொந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ எஸ்.பி.யாக அயல் பணியில் சென்றார். 7
ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார். பின்னர் ஐஜியாகப் பதவி உயர்வுபெற்று தமிழகம் திரும்பிய மகேஷ்குமார் அகர்வால், சிபிசிஐடி ஐஜியாகப் பதவி வகித்தார். பின்னர் மதுரை காவல் ஆணையராகச் சென்றார். மீண்டும் சிபிசிஐடி ஐஜியாகப் பதவி ஏற்றார். பின்னர் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்றார். பின்னர் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், 2020-ல் சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றவர். சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும், பொது சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதல்வர் பதக்கத்தையும் வென்ற இவர் சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் திறம்பட செயலாற்றியவர். தற்போது உயர் பதவியான தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.