தஞ்சையில் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனரை மிரட்டி ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது…!
தஞ்சாவூர், ரகுமான்நகர், 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஆர். சரவணன் (37), என்பவர் தனது பங்குதாரர்களுடன் இணைந்து தஞ்சாவூர் – வல்லம் சாலையில் தனியார் பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவர் அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையின் பங்குதாரர்களுக்கு இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக சரவணன், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடமும் புகார் தெரிவித்தார். எதிர் தரப்பினரும் ஐஜி இடம் புகார் அளித்தனர். இதற்கிடையே, மருத்துவமனை நிர்வாக விவகாரத்தில் காவல் துறை அதிகாரி ஒருவர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தங்களைக் மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்வதாகவும் சரவணன் குற்றம் சாட்டினார். மேலும், மருத்துவமனை நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் சட்டத்துக்குப் புறம்பாகத் தலையிடும் காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக டிஜிபியிடம் மனு அளித்தார். டிஜிபி உத்தரவின் பேரில் விசாரணை தீவிர படுத்தப்பட்டது. சரவணனிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியதில் பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் காவல் துறையினர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் , காவல் துறை அதிகாரி ஒருவர் ரூ.5 கோடி வரை கேட்டதாகவும், அதில் ரூ.3.25 கோடியை ரொக்கமாகவும், ரூ.1.75 கோடியைக் காசோலையாகவும் வழங்கியதாகவும் சரவணன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரில் வசித்து வரும் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாறன் வீட்டுக்கு சிபிசிஐடி போலீஸார் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், வழக்குடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர், அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீஸார், அங்கு அவரை அனுமதித்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வீடியோ பதிவுகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.