நாளை தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு ! திருச்சி மாவட்டத்தில் 30 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
தமிழகத்தில் மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான பொதுத்தேர்வு நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுத்தேர்வு குளறுபடியின்றி முறையாக நடைபெற ஏதுவாக பல்வேறு முன்னேற்பாடுகள் தேர்வுத் துறையால் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில்,திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுக்காக 130 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் மத்திய சிறைக்கைதிகளுக்காக சிறைவளாகத்தில் தனியாக மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளையும் (வெள்ளிக்கிழமை), பிளஸ்-1 பொதுத்தேர்வு வருகிற 4-ந்தேதியும் தொடங்கவுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கல்வி மாவட்டங்களை சேர்ந்த 13,603 மாணவர்கள், 16,400 மாணவிகள் என்று 30,003 பேர் பிளஸ்-2 தேர்வையும், 15,211 மாணவர்கள், 17,102 மாணவிகள் என்று 32,313 பேர் பிளஸ்-1 தேர்வையும் எழுத உள்ளனர். மேலும் திருச்சி மத்திய சிறையில் பிளஸ்-1 தேர்வை 35 பேரும், பிளஸ்-2 தேர்வை 9 பேரும் என்று 44 கைதிகள் தேர்வு எழுத இருக்கிறார்கள். நாளை தொடங்கும் பிளஸ்-2 தேர்வு 22-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதலில் தமிழ் தேர்வும், அதனை தொடர்ந்து 5-ந்தேதி ஆங்கிலம், 8-ந்தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ் தமிழ், ஹோம் சயின்ஸ், புள்ளியியல் ஆகிய பாடப்பிரிவுகள், 11-ந்தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், 15-ந்தேதி இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, 19-ந்தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 22- ந் தேதி பயாலஜி, தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3, 4 நாட்கள் இடைவெளி உள்ளது. தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்க்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வின் போது, காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்துக்கு, சென்னை தனியார் பள்ளி இயக்கக இணை இயக்குனர் எம்.ராமசாமி தேர்வு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.