பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா : திருச்சியில் இன்று போக்குவரத்து மாற்றம்…
பெரும்பிடுகு முத்தரையரின் 1348வது சதய விழாவையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதன் காரணமாக ஒத்தக்கடை வழியாக இயக்கப்படும் பேருந்துகளின் வழித்தடங்களில் இன்று ( 23.05.2023 ) தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒத்தக்கடை வழியாக சென்னை,சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை செல்லும் புறநகா் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் சிலை, பிரீஸ் ஓட்டல் சந்திப்பில் திரும்பி ரயில் நிலையம் வழியாக மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும். மறுமார்க்கத்தில் வரும் பேருந்துகள் மன்னார்புரம், அரிஸ்டோ ரவுண்டானா, மிளகுபாறை வழியாக மத்திய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் வெஸ்ட்ரி ரவுண்டானா வழியாக எம்.ஜி.ஆர்.சிலை, புத்தூர், தில்லைநகர் வழியாக சென்று மறு மார்க்கத்தில் இதே வழியில் திரும்பி வெஸ்ட்ரி ரவுண்டாவிலிருந்து கலெக்டர் அலுவலகம், மிளகு பாறை வழியாக மத்திய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும்.
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அமெரிக்கன் மருத்துவமனை வழியாக சத்திரம்பேருந்து நிலையம் செல்லும் நகரப்பேருந்துகள் வெஸ்ட்ரி ரவுண்டானா, ஐய்யப்பன் கோவில் சாலை, எம்ஜிஆர் சிலை வழியாக செல்லவேண்டும். மறு மார்க்கத்தில் இதே வழியில் திரும்பி வெஸ்ட்ரி ரவுண்டானா, கலெக்டர் அலுவலகம், மிளகுபாறை வழியாக மத்திய பேருந்து நிலையத்தை அடைய வேண்டும் .
அதேபோல மாலை அணிவிக்க வரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினர் ஒதுக்கியுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தி பின்னர் சிலை அமைந்துள்ள பகுதிக்கு நடந்து செல்ல வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.