மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சிக்கு ‘சீட்’ ஒதுக்கப்படாதது ஏன்? -அமைச்சர் கே.என்.நேரு பதில்…!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3,000 பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கும் விழா இன்று(12-03-2024) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு , அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவுறும். தேர்தலுக்குப் பிறகு தமிழக முதல்வர் அதனை திறந்து வைப்பார். தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவசரமாக திட்ட பணிகளை துவக்கி வைக்கவில்லை. முடிவற்ற பணிகளையே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறோம். திமுக கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக போட்டியிடுகிறதா? என்பது குறித்து தலைவர் ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும். அவரது உத்தரவுபடி நாங்கள் செயல்படுவோம் என்றார். திமுகவுடன் பயணிக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே என்ற கேள்விக்கு, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேசி உள்ளோம். நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். கூட்டத்திற்கு பிறகு அவர்கள் கருத்தை தெளிவுபடுத்துவார்கள். நடிகர் கமலஹாசனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல் ராஜ்ய சபா சீட் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, ராஜ்யசபா சீட்டு கொடுத்தது குறித்து விமர்சிப்பதற்கு ஒன்றும் இல்லை.
முதல்வர் ஸ்டாலின் எதைச் செய்தாலும் சரியாகத்தான் இருக்கும். காங்கிரஸ் சிட்டிங் எம்.பி.திருநாவுக்கரசர் மீண்டும் திருச்சியில் போட்டியிட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, தொகுதி பங்கீடு இன்னும் நிறைவு பெறவில்லை. திருநாவுக்கரசர் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும். அதை நான் சொல்ல முடியாது. மத்திய அரசு வீடு கட்டும் திட்டம், ஜல் ஜீவன் குறித்து பேசிய கே.என்.நேரு, மத்திய அரசு தனது பங்காக 30 சதவீதம் மட்டுமே வழங்குகிறது. மீதித் தொகையை மாநில அரசே செலவிடுவதாக கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.