தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று( ஏப்.20) சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து செல்வப் பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஒரு முக்கியமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக இன்று தமிழகம் வருகை தந்துள்ள நிலையில், வருமான வரித்துறையினர் இந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு ‘சோதனை’ என்ற பெயரில், ஸ்ரீபெரும்புதூர் சட்டசபைத் தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக முடக்கினர். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கவும், கருத்து வேறுபாடுகளை ஒடுக்கவும், அரசியல் பங்களிப்பைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு, முகமைகளை அரசியல் அழுத்தக் கருவிகளாகப் பயன்படுத்தும் ஒரு கவலையளிக்கும் போக்கை இது பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தில், சட்டத்தைக் காக்க வேண்டிய நிறுவனங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்படும்போது, அது பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்து நமது ஜனநாயக அமைப்பின் நேர்மையைச் சீரழிக்கிறது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்தவிதமான அச்சுறுத்தலும் மக்களுக்குச் சேவை செய்யும் எங்களது கடமையிலிருந்தும், நீதி, நேர்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதிலிருந்தும் எங்களைப் பின்வாங்கச் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். ஆனால், வருமான வரித்துறையோ சோதனை ஏதும் நடத்தவில்லை. அவரை ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததாக கூறுவதும் உண்மை இல்லை என விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த துறை அளித்த விளக்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு ஏதும் நடத்தவில்லை, அவர் சொல்வது போல் அவரது வீடு உள்ளிட்ட எந்த இடத்திலும் சோதனை நடத்தவில்லை. தென் தமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாமல் தடுப்பதாக செல்வப்பெருந்தகை கூறுவதிலும் உண்மை இல்லை என தெரிவித்துள்ளது.

Comments are closed.