Rock Fort Times
Online News

கரூர் அருகே கந்துவட்டி கேட்டு தந்தையை கட்டி வைத்து சித்ரவதை- இளம் பெண் தற்கொலை…!

கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே உள்ள சாலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் விசுவநாதபுரியைச் சேர்ந்த அபிமன்யு என்பவரிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்று அசலுக்கு மேல் ஒரு லட்சம் ரூபாய் அதிகமாக செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேலும் வட்டி தொகை கேட்டு, கந்தசாமியை கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி தண்ணீர் பந்தல் பாளையத்தில் கட்டி வைத்து, பணம் செலுத்தினால் தான் விடுவிக்க முடியும் என்று அபிமன்யு மற்றும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அடுத்த நாள் வட்டி தொகையை கொடுத்து
விடுவதாக கூறி மன்னிப்பு கேட்டு தந்தை கந்தசாமியை அவரது மகள் கலைவாணி (வயது 23) வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலை கந்தசாமியின் வீட்டுக்கு வந்த அபிமன்யு மற்றும் அவரது நண்பர்கள் சிலர் தகாத வார்த்தைகளால் கலைவாணியிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அன்று காலை கலைவாணி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கலைவாணிக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக க. பரமத்தி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 27-ம் தேதி க.பரமத்தி காவல் நிலையத்தில் கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கந்தசாமி புகாரளித்தார். புகாரின் பேரில் க. பரமத்தி காவல்துறையினர் BNS 296, 108, பெண்கள் மீதான பாலியல் புகார் பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரி, கலைவாணியின் உடலை வாங்க மறுத்து அவரது தந்தை மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்