தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 28) வீட்டு வசதித்துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தில் சோழவந்தான் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசுகையில், இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை. அதற்கு மாறாக மற்ற திட்டங்களுக்கு செலவழிக்கலாம்” என்று தெரிவித்தார். அவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜல்லிக்கட்டிற்கு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும், பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது. சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை? ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்காக தனது எம்.எல்.ஏ.வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது. தனது எம்.எல்.ஏ.பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான்,
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. சர்க்கரை ஆலைக்கு நிதி கேட்டுப் பெறுவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தி பேச வேண்டிய தேவை என்ன?, தெருக்கு தெரு இருக்கும் சாராயக்கடைக்கு சென்று மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? அலங்காநல்லூர் வாடிவாசலில் காளையைத் தழுவி வீரத்தைக் காட்டும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா? சாராயக்கடைக்கு அரசு இடம் கொடுத்தால் அது வருவாய்; ஜல்லிக்கட்டுக்கு அரசு இடம் கொடுத்தால் அது வீண் செலவா? எப்படிபட்ட மோசமான பார்வை இது? இளைஞர்களைச் சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்று பேசுவது அறியாமையின் உச்சமல்லவா?. எனவே, சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தனது கருத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.