திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், ராம்ஜீநகர் அருகேயுள்ள அரியாவூரைச் சேர்ந்தவர் செல்வம் (55). விவசாயியான இவருக்கு , கீரிக்கல்மேடு படுகைக்காடு பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இவரது இடத்திற்கு அருகே, அதே பகுதியைச் சேர்ந்த சி. வீரமலை கார்த்தி (29) என்பவருக்கும் நிலம் உள்ளது. இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வீரமலை கார்த்தி மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த க.சுரேஷ் (27), சே. கார்த்திகேயன் (26) ஆகியோர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி, பிரச்னைக்குரிய நிலத்திலிருந்த மரத்தை வெட்டியுள்ளனர். அப்போது செல்வம் மரத்தை வெட்டக்கூடாது எனவும், நிலத்தை அளந்து பின்னர் வெட்டிக் கொள்ளுங்கள் எனவும் கூறி தடுத்து நிறுத்தியுள்ளார். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக செல்வம், ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார், வருவாய்த் துறையினரை வைத்து நிலத்தை அளந்துகொள்ள அறிவுறுத்தினர். செல்வம் நிலம் அளப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். நிலத்தை அளந்தால் தமக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று நினைத்த வீரமலை கார்த்தி, நிலத்தை அளக்காமல், செல்வத்தை தீர்த்துக் கட்ட முடிவெடுத்தார். தனது நண்பர்கள் சுரேஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருடன் அதே ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி இரவு, செல்வம் வீட்டுக்கு சென்று, கத்தி, கட்டை, சைக்கிள் செயின் உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்வத்தை தாக்கினர். இதில் சொல்வத்துக்கு கத்திக்குத்து உள்பட பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் தடுக்கச் சென்ற அவரது மனைவி அரவி மற்றும் மாமியார் கருப்பாயி ஆகியோரும் காயமடைந்தனர். அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்ட்டனர். இதில், சிகிச்சையிலிருந்த செல்வம் சிகிச்சை பலனின்றி ஜூலை 15 ஆம் தேதி உயிரிழந்தார். ராம்ஜிநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட 2வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.சரவணன், வீரமலை கார்த்தி, சுரேஷ், கார்த்திகேயன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். வழக்கில், வீரமலைகார்த்தி மற்றும் கார்த்திகேயன் இருவருக்கும் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.

Comments are closed.