Rock Fort Times
Online News

சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் படுகொலை: எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்…!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட ஹரிசக்தி, ஹரிஷ் ஆகிய 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும், கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் ‘பாதுகாப்பற்ற மாடல்’ அரசை நடத்தும் தி.மு.க. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை. ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா? இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த்தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.

இதேபோல பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில், சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட, பொறியியல் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்களை, சாராய வியாபாரிகள் படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதுமே கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது அந்தந்த பகுதி போலீசாருக்கு தெரியாமலா இருக்கும்? இன்று சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் உயிர் போயிருக்கிறதே. உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா? துருப்பிடித்த இரும்புக்கையை வைத்துக் கொண்டு, தன்னைத்தானே புகழ்ந்து தினமும் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்க, முதல்வர் ஸ்டாலினுக்குக் கூச்சமில்லையா? சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழ் சினிமாவில் முழு நேர துணை நடிகராகச் செல்ல வேண்டியதுதானே? தமிழ்த் திரையுலகம் உங்கள் கைகளில்தானே இருக்கிறது. தமிழகம் தற்போது, 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தி.மு.க.,வின் இருண்ட ஆட்சிக் காலத்தை விட, மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. உங்கள் கையாலாகாத்தனத்தால், அமைதியான பொதுமக்களை, மிக மிக மோசமான எதிர்விளைவுகளுக்குத் தூண்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்