திருச்சி மாவட்டம் மணப்பாறை ஜீவா நகரில் வசித்து வந்தவர் ஜெயராமன் கமலவேணி ( வயது 65). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கி வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (52) என்பவருக்கு ரூ 1.60 லட்சம் பணம் வட்டிக்கு கொடுத்துள்ளார். அதற்கான வட்டி பணத்தை கடந்த மாதம் 16-ம் தேதி அன்று சரஸ்வதியின் வீட்டிற்கு சென்று அவர் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சரஸ்வதி, கமலவேணியை தாக்கியுள்ளார். இதில், அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை மறைப்பதற்காக சரஸ்வதி அவரது மகள் வர்சினி (22), மகன் ஹர்சன் (19) ஆகிய மூவரும் சேர்ந்து கமலவேணியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி இரவோடு இரவாக இருசக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு ஜீவா நகர் பகுதியில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குரு நகர் பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள குளத்து கரை காளியம்மன் கோவில் கேணியில் தூக்கி போட்டுள்ளனர். இந்த நிலையில் கமலவேணியின் மகள் மலர்விழி, கடந்த மாதம் 17ம் தேதியன்று தனது தாய் கமலவேணியை காணவில்லை என்று மனப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கமலவேணி 16ம் தேதி கடைசியாக சரஸ்வதி வீட்டிற்கு சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக சரஸ்வதி இடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கமலவேணியை கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாக தெரிவித்தார். அதன் பேரில், சரஸ்வதி மற்றும் அவருக்கு உதவிய மகள் வர்சினி, மகன் ஹர்சன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். 16 நாட்களுக்கு பின் கிணற்றில் இருந்து கமலவேணி உடல் மீட்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.