முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்கும் முதலமைச்சர் விஜய்…!
முதலமைச்சர் விஜய் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டார். திருச்செந்தூர் முருகப்பெருமான் அசுரர்களை போரில் வென்ற திருத்தலம். அதேபோல் தேர்தல் போரில் எதிரிகளை வெல்ல வேண்டும் என்ற வேண்டுதலுடன் விஜய்யும் சென்றார். நினைத்ததை போலவே வென்றார். ஆட்சி அமைத்தார். இப்போது யாரும் எதிர்பாராத வகையில் நாளை (ஜூன் 12) கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு முதல்வர் விஜய் சென்று வழிபட திட்டமிட்டுள்ளார். இந்த கோவிலின் பெருமையையும், சக்தியையும் உணர்ந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அரசியல் ரீதியாக கடுமையான சவால்களை சந்தித்த போது எதிரிகளை சமாளிக்கும் ஆற்றல் பெறுவதற்காக கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். அவருடைய வேண்டுதல் நிறைவேறி அரசியலில் சாதித்தார். இதனால் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதை வழக்கமாக்கினார். தனது நன்றி கடனாக அம்பாளுக்கு தங்க வாள் ஒன்றையும் காணிக்கையாக செலுத்தினார். ஒரு கிலோ எடையில் 2.5 அடி நீளம் கொண்ட அந்த வாள் இன்றும் கோவில் கருவறையில் உள்ளது. அதற்கும் தனி பூஜை செய்யப்படுகிறது. எம்.ஜி.ஆர். வழி வந்த ஜெயலலிதாவும் இந்த கோவில் மீது மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்தார். இழந்த அதிகாரம், பதவியை திரும்ப பெறவும், எதிரிகளை தனது பாதையில் இருந்து விலக்குவதற்கும் இந்த கோவிலில் சண்டி யாகம் நடத்துவது சிறப்பு வாய்ந்தது. இதனால் அரசியல் ரீதியாக தான் சந்தித்த நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காகவும், மீண்டும் பதவிக்கு வருவதற்காகவும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று ஜெயலலிதா சண்டி யாகம் நடத்தினார். அதன்பிறகு அவர் மீண்டும் 2011 முதல் தொடர்ந்து 2 முறை ஆட்சியை கைப்பற்றினார். கல்வி, செல்வம், வீரம் அனைத்தையும் அருளும் இந்த திருத்தலத்திற்கு பிரபலங்கள் பலரும் அடிக்கடி சென்று தரிசித்து வருகிறார்கள். சூர்யா-ஜோதிகா, மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர். போன்றவர்கள் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இந்தி பட உலக சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ‘கூலி’ படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார். அப்போது இந்த கோவிலின் மகத்துவத்தை அறிந்து வேண்டுதல் வைத்துள்ளார். பின்னர் அமிதாப்பச்சன் உடல்நலம் சிரானதும் அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனை செலுத்தி இருக்கிறார்கள். தற்போது
முதல்வர் விஜயும் இந்த கோவிலுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.