பாஜக கொடி கட்டிய காரில் பணம், மோடியின் உருவம் பதித்த கவர்கள் பறிமுதல்- பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி…!
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையில் போலீசார் வெங்கடேஷ், மதுமிதா, ராமகிருஷ்ணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பாஜக கொடி கட்டிய கார் ஒன்று வந்தது. அந்தக் காரை நிறுத்தி சோதனை செய்த போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா இந்திரா காலனி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவரும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மூணான்பட்டி பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரும் இருந்தனர். அந்த காரில் ரூ.75 ஆயிரத்து 800 ரொக்கம் மற்றும் பிரதமர் மோடி உருவம் பதித்த கவர் கள் இருந்தது. அதனை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் லோபோ, முதுநிலை வருவாய் ஆய்வாளர் அப்துல்காதர் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.