பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளதாக திருச்சி மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, –
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி.குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு – இறப்பு பதிவு சட்டம், 1969 வழி வகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும். குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை பெற ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப் பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ.200/- தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.

இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி. 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்ய சம்ந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறான கால அவகாசம் நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு-இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Comments are closed.