ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சி அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்…* முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..!
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க மிகவும் புகழ்பெற்ற மற்றும் புனிதமான இடமாகும். அமாவாசை நாட்கள், ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.
அந்தவகையில் ஆடி அமாவாசையான இன்றைய தினம்(12-08-2026) ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே பொதுமக்கள் வந்து குவிய தொடங்கினர். பின்னர் அவர்கள் தங்கள் வம்சம் செழிக்கவும், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும் தர்ப்பணம் கொடுத்து ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.
தர்ப்பணம் கொடுத்தவர்கள் அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு விளக்கேற்றி பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கினர். இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு காவிரி கரையோரங்களில் ஆடி அமாவாசையான இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பின்னர் அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படத்துறையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Comments are closed.