Rock Fort Times
Online News

தொகுதி மறு வரையறை தீர்மானத்திற்கு ஆதரவும்…எதிர்ப்பும்…!

நாடாளுமன்றத்தில் 543 தொகுதிகளே இருக்க வேண்டும், தொகுதி மறு வரையறை மூலம் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று(12-08-2026) தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

உதயநிதி ஸ்டாலின் (திமுக):-

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எக்காரணத்தை கொண்டும் தமிழகம் பாதிக்கப்படக் கூடாது என்பதே தி.மு.க. நிலைப்பாடு. எம்பிக்கள் எண்ணிக்கை குறைக்க அனுமதிக்க மாட்டோம், தமிழகத்தின் விகிதாச்சாரம் குறையக்கூடாது என இதே சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். தி.மு.க.வின் எதிர்ப்பால் தான் தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக):-

தமிழகத்திற்கான எம்பிக்கள் எண்ணிக்கை 39ல் இருந்து 59 ஆக உயர்வதற்கு தொகுதி மறுவரையறை வழிவகை செய்யும். அரசியல் காரணங்கள், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே தவெக அரசு தொகுதி மறுவரையறை தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா பாதகமானதா? சாதகமானதா? என தெரியாத நிலையில்  தனித்தீர்மானத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

செல்லசுவாமி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி):-

தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. நாடாளுமன்றத்தில் இப்போது உறுப்பினர்கள் எல்லோரும் பேச நேரம் இல்லை. பாஜக செல்வாக்கு அதிகம் உள்ள வடமாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதே அவர்களின் திட்டம். மாநில உரிமை பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றார்.

ராமச்சந்திரன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) :

தொகுதி மறுவரையறை தென்மாநிலங்களுக்கு பாதிப்பாக அமையும். தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் . குடும்பக் கட்டுப்பாட்டை கறாராக நிறைவேற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும் என்றார்.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) :-

இந்தத் தீர்மானம் எதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. தொகுதி மறுவரையறை மூலம் 59 எம்பிக்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. 10 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி. தான் தற்போது உள்ளனர். தொகுதி மறுவரையறை மூலம் 8 லட்சம் மக்களுக்கு ஒரு எம்பி வருவர் என்று தெரிவித்தார்.

கணேஷ்குமார்( பாமக):-

பெரிய கட்சிகளே நிர்வாக வசதிக்காக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துகிறார்கள். உள்ளாட்சிகளிலேயே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதால் தமிழ்நாட்டில் இருவேறு நிலைப்பாடு என்றது போல் ஆகி விடும் என்றார்.

போஜராஜன்( பாஜக):-

எப்போதுமே மாற்றத்தை நாம் ஏற்று கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையை நினைத்தே தான் புதிய நாடாளுமன்றம் சுமார் 850 உறுப்பினர்கள் அமரும் வகையில் கட்டமைக்கப்ட்டுள்ளதே தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இன்னும் விவாத நிலையில் மற்றும் பரிசீலனையில் இருக்கும் விஷயத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு அவசரம் காட்டுவது ஏன்? என்று கேள்விஎழுப்பினார்.

ராஜேஷ்குமார் ( காங்கிரஸ்):-

தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தமிழக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. வாக்கு வங்கி அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் கூறினார்.

அமைச்சர் வன்னியரசு( விசிக) :-

“முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம். இது தனி தீர்மானம் அல்ல; தனித்துவமான, மகத்துவமான, தென்னிந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டும் தீர்மானம். தனி தீர்மானத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்