மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று(12-08-2026) காலை தொடங்கியதும். முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை/சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 2026-ல் நாடாளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-ல் இருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது. இந்த நிலையில், மீண்டும் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளது எனத் தெரிந்ததன் அடிப்படையில் 1971-ம் ஆண்டுக்கு பிறகு உள்ள எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள்தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை. மத்திய அரசு அளித்த உறுதியின்படி, மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம். மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்தவொரு மாநிலமும் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது மத்திய அரசின் தலையாய கடமையாகும். 543 எண்ணிக்கையே தொடர வேண்டும். எனவே. தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கைப் பகிர்வை நிரந்தரமாக வைக்கவும். மேலும், தற்போது மக்களவை மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்றும், அதே வேளையில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி. தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது.
- நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
- தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
- வரவிருக்கும் மக்களவை பொதுத் தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.