கடந்த தி.மு.க ஆட்சியில் மகளிருக்கு மாதந்தோறும்
ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2023-ம் ஆண்டு செப்டம்பர் முதல் மாதந்தோறும் 15-ம் தேதி, தகுதி வாய்ந்த பெண்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், 2026-ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி 13-ம் தேதியே அடுத்த 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 3,000, கோடைகால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ.5,000 பெண் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க உத்தரவிட்டார்.
மேலும், திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இந்த தொகையானது ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த முறை த.வெ.க ஆட்சியை பிடித்தது. முதலமைச்சர் விஜய்யும், தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான உரிமைத்தொகை
ரூ. 2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால், நேற்றைய தினம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும் எனவும், அதற்கு சற்று காலதாமதம் தேவைப்படுகிறது என்றும் முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தடைபடாமல் உடனடியாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியான தி.மு.க தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. மாதம் ரூ. 2,500 தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு ரூ. 1,000 கூட தராமல் இழுத்தடிப்பது தான் உங்கள் மாற்றமா?” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து, எப்போதும் போல மே 15-ம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க அரசு கொடுத்து வந்த ரூ.1,000 உரிமைத்தொகை, பெண் பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்க உத்தரவிட்டார். அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது.

Comments are closed.