காதல் விவகாரம்: தாய்- மகனை தாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் உட்பட 3 பேர் கைது…!
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி- கணபதி தம்பதியர் உய்யகொண்டான் திருமலையில் பர்னிச்சர் கடை வைத்துள்ளனர். இவர்களது கடையில் வேலை பார்த்த ஜனனி என்ற பெண்ணிடம் விஜயலட்சுமியின் மகன் செந்தில்குமார் பழகி பண உதவிகள் செய்து வந்துள்ளார். இதனை அறிந்த விஜயலட்சுமி, ஜனனியை வேலையில் இருந்து நீக்கினார். இந்தநிலையில் ஜனனி, நவம்பர் 23-ம் தேதி இரவு விஜயலட்சுமியின் வீட்டுக்கு நாம் தமிழர் கட்சி பிரமுகரான சென்னை பம்மல் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த எஸ்.சுதாகர் (42), அவரது நண்பர்களான பொழிச்சலூர் எஸ். திசேந்தன் (26), நங்கநல்லூர் ஜி. ராஜேஷ்குமார் (28) ஆகியோருடன் சென்று விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாரை தாக்கி ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் இல்லையெனில் செந்தில்குமார் காதலிப்பதாகக் கூறி ஜனனியை ஏமாற்றிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், பெட்டவாய்த்தலை போலீஸார் வழக்குப் பதிந்து, சுதாகர், ராஜேஷ்குமார், திசேந்தன் ஆகியோரை கைது செய்தனர். இது ஒருபுறம் இருக்க செந்தில்குமார், ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், இருவரும் தனிமையில் இருந்த புகைப்படம் மற்றும் விடியோக்களை சமூக வலை தளங்களில் பரப்பி விடுவதாக தன்னை மிரட்டியதாக ஜனனி அளித்த புகாரின் பேரில் , ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.