Rock Fort Times
Online News

ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கிறது …!

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (30.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மாமல்லபுரம் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், கடல் அலைகள் 10 அடி உயரம் வரை எழும்புகின்றன. அதே சமயம் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னை தியாகராயநகர் ஜி.என். செட்டி ரோடு மேம்பாலம், வேளச்சேரி மேம்பாலம் மற்றும் ராயபுரம் மேம்பாலத்தில் மீண்டும் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று 30ம் தேதி நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 3ம் தேதி நடைபெறும் என மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில் வழக்கம்போல், சென்னை மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி சின்ன காலாப்பட்டு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடல் நீர் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள வீடுகளைத் தொட்டுச் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🔴LIVE : காவல்துறை மீது தாக்குதல் அதிகரித்துள்ளது திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

1 of 938

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்