76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று (26-01-2025) விடுமுறை அளிக்கப்பட்டது. கள்ள சந்தையில் மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அரசின் உத்தரவுப்படி, அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால், ஒரு நாள் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் மது பிரியர்கள் திண்டாடினர். கள்ளச் சந்தையில் விற்கப்படும் மது பாட்டில்களை தேடி அலைந்தனர். அவ்வாறு தேடி அலைந்தவர்களுக்கு சிட்டி பகுதியில் மது பாட்டில்கள் சர்வ சாதாரணமாக கிடைத்தன. குறிப்பாக காந்தி மார்க்கெட் பகுதியில் மது விற்பனை “படு ஜோராக”நடந்தது. ஒரு மது பாட்டிலுக்கு 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்பனை செய்யப்பட்டது. பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள், பீர் பாட்டில்கள் விற்கப்பட்டன. அதனை அங்கேயே வைத்து குடிக்கவும் செய்தனர். இங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது ஒரு புறம் இருந்தாலும் மதுபான பார் எதிரே காவல் வாகனம் நிற்கிறது. ஆனால் காவலர்கள் கண்டுகொள்ளாமல் மது விற்பனைக்கு ஆதரவாக செயல்படுவது தான் சட்ட விரோதத்தின் உச்சம். மதுபான பாரின் உள்ளே மூன்று நபர்கள் இருந்து பெட்டி, பெட்டியாக மது வகைகளை விற்பனை செய்தனர். இதனை தடுக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்க்கிறது. அதுவும் குடியரசு தின நாளில் சரக்கு விற்று கல்லா கட்டுவது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாக பார்க்கப்படுகிறது. ஆகவே, விடுமுறை நாளில் மது வகைகளை விற்ற நபர்கள் மீதும், அதனை வேடிக்கை பார்த்த காவல்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments are closed.