Rock Fort Times
Online News

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி, திருப்பலி…!

இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாட்கள் வரை கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த நாட்களில் இறைச்சி வகைகளை பெரும்பாலும் தவிர்த்து ஜெபங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 16ஆம் தேதி, 23ஆம் தேதி, மார்ச் 1ஆம் தேதி, மார்ச் 8ஆம் தேதி, 15ஆம் தேதி, 22ஆம் தேதி ஆகிய வெள்ளிக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப் பாதை மற்றும் திருப்பலி நடைபெற்றன. இன்று( 24.3.2024) குருத்து ஞாயிறு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. அப்போது கிறிஸ்தவர்கள் தங்களது கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு ஓசன்னா பாடலை பாடியபடி ஊர்வலமாக புறப்பட்டு தேவாலயத்தை வந்தடைந்தனர். பின்னர் தேவாலயங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அதன்படி, திருச்சியில் உள்ள மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயம், சத்திரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள லூர்து மாதா பேராலயம், பாலக்கரையில் உள்ள தூய சகாய மாதா பேராலயம், புத்தூர் பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் குருத்து ஞாயிறு பவனி மற்றும் திருப்பலி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மார்ச் 28ஆம் தேதி கடைசி உணவு நிகழ்ச்சியும், மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளியும், கடைப்பிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த மார்ச் 31ஆம் தேதி உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்டர்) பெருவிழா கொண்டாடப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்