கரூரில் செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பரப்புரை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை கரூர் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அப்போதைய திமுக தலைமையிலான அரசு சார்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய விசாரணையில், விஜய் தாமதமாக வந்ததும், எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக கூட்டம் சேர்ந்ததும் தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில், தவெக சார்பில், இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க வேண்டுமென வலியுறுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் வழக்கு சிபிஐ வசம் முழுமையாக மாற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்து, பிற கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றார். அவர் முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்பட காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் மட்டும் மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், 10 காவல் ஆய்வாளர்கள், ஐந்து உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டு 19 காவல்துறையினர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் டவுன் காவல்துறையின் கண்காணிப்பாளராக இருந்த செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை காவல் துறை கண்காணிப்பாளர் கடலூர் மாவட்டத்திற்கும், அரவக்குறிச்சி காவல்துணை கண்காணிப்பாளர் தர்மபுரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Comments are closed.