திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் விழித்திரு சிறார் வன்கொடுமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள், ஜோசப் கண் மருத்துவமனை, ஜீ.வி.என். ரிவர்சைடு மருத்துவமனை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டுநலப் பணி திட்ட இயக்கம் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் பூங்காவில் இருந்து இன்று ( 09.08.2023 ) காலை தொடங்கியது. பேரணியை, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ் , ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்தஜோதி, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபிரபா ஆகியோர் தொடங்கி வைத்தனர் . இதில் திருச்சி மண்டல ரோட்டரி, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

பேரணி எம்.ஜி.ஆர்.சிலை, மாணவர்கள் சாலை, வழியாக தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் முடிவடைந்தது. இதில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உடல், மனம், பாலியல் சீண்டல்கள் மற்றும் ஒதுக்கி வைத்தல் ஆகிய 4 துன்புறுத்தல்களும் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு துன்புறுத்துவோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற கருத்து எடுத்துரைக்கப்பட்டது. இதில், காவல் துணை ஆணையர்கள் அன்பு , செல்வகுமார் ,ரோட்டரி மாவட்ட சிறப்பு திட்ட செயலாளர் முரளி, நிர்வாக செயலாளர் செந்தில்குமார், திட்ட தலைவர் ராணி ரோஸ்லின் மற்றும் அனைத்து ரோட்டரி மாவட்ட செயலாளர்கள், துணை ஆளுநர்கள், தலைவர்கள், செயலாளர்கள், ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு, ஜீ.வி.என் ரிவர்சைடு மருத்துவமனை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் கேசவன், எட்வின், ஜானகி, ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.