அஞ்சல் துறை மகளிர் மதிப்பு திட்டத்தில் ரூ.130 கோடி முதலீடு; திருச்சி மத்திய மண்டலம் முதலிடத்தை பிடித்தது
அஞ்சல் துறையில் மகளிர் மதிப்பு திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி பெண்களுக்கென்று தொடங்கப்பட்டது. இந்த 2 வருட சிறப்பு திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தில் மத்திய மண்டலத்தில் இதுவரை 46 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டு சுமார் ரூ.130 கோடி முதலீடு ஈட்டப்பட்டது. இதன்மூலம் திருச்சி மத்திய மண்டலம் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது. இந்த திட்டத்தை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் திருச்சி மத்திய மண்டல தலைவர் கடந்த 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை அன்னையர் தினத்தின் முகமாக சிறப்பு மேளா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இந்த மேளாவில் மகளிர் மதிப்பு திட்டம் மற்றும் இதர அஞ்சல் சேவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இணைந்தவர்களுக்கு 3 கட்ட அதிர்ஷ்ட குலுக்கல் திருச்சி தலைமை அஞ்சலகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று நடத்தப்பட்டு 15 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து பெண்களும் இந்த சிறப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் நிர்மலாதேவி கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.