Rock Fort Times
Online News

அமைச்சர் குறித்து ஆணவபேச்சு! பெண் பணியாளர்களுக்கு ஆபாச அர்ச்சனை!- திருச்சி மண்டல போக்குவரத்து பொது மேலாளர் முத்துக்கிருஷ்ணனின் “ஹிட்லரிசம்”

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், திருச்சி மண்டல பொது மேலாளராக பணியாற்றுபவர் ஆ.முத்துகிருஷ்ணன். இவரை பார்த்தாலே அய்யோ… அம்மா… என அலறி துடிக்கிறார்கள் அத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள். அந்த அளவுக்கு, தனக்கு கீழ் பணியாற்றும் துணை மேலாளர்கள் முதற்கொண்டு, கடைநிலை பணியாளர்கள் வரை அனைவரையுமே அச்சில் ஏற்றமுடியாத அளவுக்கு சகட்டுமேனிக்கு கெட்ட, கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் இவரால் பாதிக்கப்பட்டவர்கள். இதுகுறித்து திருச்சி மண்டல போக்குவரத்து பொது மேலாளர் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களிடம் பேசினோம்., அப்போது மனக்குமுறலோடு அவர்கள் கூறுகையில்., “மாலை 6 மணிக்கு மேல் எந்த ஒரு பெண் ஊழியரையும் வேலை வாங்கக்கூடாது என, போக்குவரத்துத் துறையின் நிர்வாக இயக்குனர் அறிவுரை கூறியுள்ளார். இந்நிலையில், வேண்டுமென்றே இரவு 8 மணிவரை பெண் பணியாளர்களை, ஜி.எம் வேலை வாங்குகிறார். ஒரு நாள், இரு நாள் என்றால்கூட பரவாயில்லை. தினமும் இதே நிலையே தொடர்வதால், வேலை பார்ப்பவர்கள் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். உயரதிகாரி சொல்லிவிட்டார் என்பதற்காக வீடு மறந்து, தூக்கம் மறந்து, கடும் பணிச்சுமையில் வேலை பார்ப்பவர்களையும்கூட இவர் நிம்மதியாக வேலை பார்க்க விடுவதில்லை. தினந்தோறும் கெட்ட, கெட்ட வார்த்தைகளால் திட்டித்தீர்ப்பது தொடர் கதையாகி கொண்டிருக்கிறது. சமீபத்தில்கூட, 4 – 5 பெண் பணியாளர்களை வைத்துக் கொண்டே, இவரது கேபினுக்கு வந்த ஒரு பெண் ஊழியரை, தரம் தாழ்ந்த “டபுள் மீனிங்” வார்த்தைகளால் கடுமையாக திட்டி இருக்கிறார் ஜி.எம்.முத்துக்கிருஷ்ணன். இதை கேட்டு கதறி துடித்துவிட்டார் அப்பெண் பணியாளர். அந்த பெண்ஊழியர் ஏதாவது செய்து கொள்வாரோ ? என பயந்து, மறுநாள் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் முத்துகிருஷ்ணன்.

கரூர் மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர், அதிமுக மாஜி மந்திரி எம்.ஆர் விஜயபாஸ்கரைத்தான், இன்னமும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக நினைத்துக் கொண்டிருக்கிறார் போல… ஏனென்றால், அளுங்கட்சியான திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் தொ.மு.ச நிர்வாகிகள் பேச்சை துளிக்கூட, காது கொடுத்து கேட்பது கிடையாது. தொ.மு.ச நிர்வாகிகள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு, இவர் பதிலளிப்பதும் இல்லை. கோப்பில் கையெழுத்திட்டு அதனை சீக்கிரமாக முடிக்கும் எண்ணமே இவருக்கு எப்போதுமே இருப்பதில்லை. பைலில் கையெழுத்து வாங்க ஜி.எம். ரூமிற்கு செல்லும் பெண் பணியாளர்கள் உள்ளிட்டவர்களை, இன்று வா… நாளை வா… என, இரண்டிலிருந்து மூன்று நாட்கள் கால் கடுக்க அலைய வைத்த பிறகுதான் கையெழுத்திடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், இவரது டேபிளுக்கு வரும் எந்த ஒரு பில்லுக்கும் உடனடியாக சாங்ஷன் கையெழுத்து போடுவது கிடையாது. திருச்சி மண்டல போக்குவரத்து கழகத்தில், இவருக்கு அடுத்த ரேங்கில் மொத்தம் 4 துணை மேலாளர்கள் உள்ளனர். அவர்களிடம் கூட வாடா.. போடா… என வாரத்திற்கு மூன்று முறை, சண்டை – சச்சரவில் ஈடுபட்டால் தான் இவருக்கு தூக்கமே வரும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் என்கிற அதிகார திமிரில், துணை மேலாளர்கள் முதல், இவருக்கு கீழ் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் வரை எந்த ஒரு பணியாளர்களையும் சக மனிதனாகக்கூட மதிக்காமல், ஏதேச்சதிகாரமாக செயல்படும் ஜி.எம். முத்துக்கிருஷ்ணன், ஆட்டை கடித்து,மாட்டை கடித்து கடைசியில் துறை அமைச்சரான எஸ்.எஸ்.சிவசங்கரையே, அமைச்சர் சொன்னா கேட்டு விடுவேனா ? என அனைவரது மத்தியிலும் சிங்குளரில் விமர்சிக்கிறார். தனது துறையின் அமைச்சரை ஒரு பொருட்டாகக்கூட முத்துக்கிருஷ்ணன் மதிப்பதில்லை. இந்த செயலை அனைத்து ஊழியர்களும் உணரும்படியே ஆணவத்துடன் நடந்து கொள்கிறார்.

இதுபோன்ற இன்னும் பல பிரச்சனைகளால், நாங்கள் நிம்மதியிழந்து வேலைபார்க்கிறோம். வேலை முடித்து வீட்டிற்கு போய் நிம்மதியாக தூங்கக்கூட முடிவதில்லை. அந்த அளவுக்கு இவர் கொடுக்கும் டார்ச்சரால், மன அழுத்தத்தில் மூச்சு முட்டுகிறது. நிலைமை இப்படியே சென்றால் எங்கள் கதி என்னாகுமோ? ” என வேதனையோடு கூறினார்கள். எனவே, இதுகுறித்து முறையாக விசாரித்து, திருச்சி மண்டல போக்குவரத்து பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இவரால் பாதிக்கப்பட்ட பணியாளர்களின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது. நாம் மேற்சொன்ன புகார்கள் குறித்து கருத்து கேட்பதற்காக, ஜி.எம் முத்துகிருஷ்ணனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். அவரது செல்போன் “நாட் ரீச்சபிலிலேயே” இருந்தது. அவரது கருத்துக்களை தெரிவிக்கும் பட்சத்தில், அதையும் பிரசுரிக்க நாம் தயாராகவே உள்ளோம்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்