தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) அதிகாரிகள் ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வுசெய்து அவற்றின் அங்கீகாரத்தை புதுப்பிப்பார்கள். ஆய்வின்போது குறைகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியிடம் விளக்கம் கேட்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டால் அங்கீகாரம் வழங்கப்படும். அப்படி குறைகள் சரிசெய்யப்படவில்லை என்றால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
அதன்படி, கடந்த மாதம் தமிழகத்தில் என்எம்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்தபோது பேராசிரியர்கள், மாணவர்களுக்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு மற்றும் சிசிடிவி கேமராக்கள் முறையாக இல்லாததும், உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த குறைபாடுகளுக்காக ஏன் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பி, தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக முதல்கட்டமாக மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த ஆணையம், குறைகளை சரிசெய்ய காலஅவகாசம் வழங்கியது. இதையடுத்து, குறைகளை சரிசெய்து அங்கீகார ரத்து நடவடிக்கையை தடுப்பதற்கான முயற்சியில் 3 மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும் தீவிரமாக ஈடுபட்டன. இதில் தருமபுரி, ஸ்டான்லி மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் குறைகள் களையப்பட்டன.
இதைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் இன்று ( 09.06.2023 ) என்எம்சி அதிகாரிகள் காணொளி காட்சி மூலம் சுட்டிகாட்டபட்ட குறைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டதா? என ஆய்வு செய்தனர். இதன் முடிவில் என்எம்சி மீண்டும் கல்லூரிக்கான அனுமதியை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அனுமதி அளிக்கபட்டபின் திருச்சி மருத்துவ கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை வழக்கம் போல நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.