Rock Fort Times
Online News

ஸ்டாலின் அங்கிள்…என்னை படிக்க வையுங்கள்’

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சத்தம் போட்டு அழைத்த சிறுமி..

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாசன வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ( 09.06.2023 ) இரவு விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டு இருந்த பகுதியில் நின்ற 7 வயது சிறுமி திடீரென ‘ஸ்டாலின் அங்கிள்’… ‘என்னை படிக்க வையுங்கள்’ என்று சத்தம்போட்டு அழைத்தார். அதற்குள் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டார். இதற்கிடையே சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த மாவட்ட கலெக்டர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ்  அந்த சிறுமியிடம் விசாரித்தார்.
அப்போது அவர், குடும்ப வறுமையின் காரணமாக பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாததால் தன்னால் படிக்க முடியாத சூழல் இருப்பதாகவும், அதனால் தன்னை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து அவரை படிக்க வைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். அந்த சிறுமியின் பெயர் காவ்யா. இவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது தாய் கவிதா, சகோதரர் கவின்குமார் ஆகியோருடன் திருச்சி விமான நிலையம் வந்துள்ளார். காவ்யாவின் தந்தை திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் என்றும் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு குடும்ப செலவுக்கு வழியில்லாமல் தவித்த கவிதாவும், அவரது 2 குழந்தைகளும் திருச்சிக்கு வந்து ஒருவாரமாக உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். இந்தநிலையில் விமான நிலையத்தில் முதல்-அமைச்சரை கண்டதும், சிறுமி காவ்யா தன்னை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்கும்படி சத்தம் போட்டு அழைத்துள்ளார் என்பது தெரியவந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்