Rock Fort Times
Online News

‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டம்; அரசு விதிகளை காற்றில் பறக்கவிடும் தனியார் மருத்துவமனைகள்? கண்காணிப்பை பலப்படுத்தி உயிர் காக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை விபத்தால் வருடத்திற்கு 18 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் மரணத்திற்கு சரியான நேரத்தில், தரமான சிகிச்சை கிடைக்காததே காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில், விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்க கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய திமுக அரசால் “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48′ என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோர் யாராக இருந்தாலும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், முதல் 48 மணி நேரத்திற்கான செலவை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. இது அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றது. முதலில் இதற்கான அதிகபட்ச செலவுத்தொகை ரூ.1 லட்சமாக இருந்த நிலையில், 2024ம் ஆண்டு உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உயரிய மருத்துவக்கட்டமைப்புகள் கொண்ட சுமார் 700 தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 24 மருத்துவமனைகளில் நம்மைக் காப்போம் -48 திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. ஆனால், திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஹாஸ்பிட்டல்களில் இதுகுறித்த தகவல்களோ, விழிப்புணர்வோ செயல்படுத்தப்படுதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறையின் விபரப்புள்ளிகள் சிலரிடம் பேசினோம். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது., “இன்னுயிர் காக்கும் நம்மைக்காக்கும் 48″திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சி காவேரி மெடிக்கல் சென்டர், அப்போலோ சிறப்பு மருத்துவமனை, அட்லஸ் மருத்துவமனை, மணப்பாறை சிந்துஜா மருத்துவமனை,
திருச்சி ஃப்ரண்ட்லைன் மருத்துவமனை, ஜி.வி.என். ஹாஸ்பிட்டல் போன்ற 24 மருத்துவமனைகள் தகுதி வாய்ந்தவை. ஆனால், இவற்றில் பெரும்பாலான மருத்துவமனைகளில் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுதில்லை. அரசிற்கு கணக்குக்காட்ட பெயரளவில் மட்டுமே “நம்மை காப்போம் -48′ திட்டம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அரசால் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள திருச்சி மாவட்டத்தின் 24 மருத்துவமனைகளில் இத்திட்டம் குறித்த விதிமுறைகளை கடைபிடிக்க அரசு பல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதில், மருத்துவமனைகளின் முன்புறமும், அவரச சிகிச்சை பிரிவிலும் நம்மைக் காப்போம் -48 திட்ட செயலாக்கம் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
ஹாஸ்பிட்டல் ரிசப்ஷனில் இதுகுறித்த முறையான தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். ஹெல்ப் டெஸ்க்கில் கட்டாயம் இத்திட்டம் குறித்து விளக்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால், இது எதையும் பல மருத்துவமனைகள் கடைபிடிப்பதில்லை. கண்ணில் கண்டதெல்லாம் காசு என பணம் மட்டுமே குறிக்கோளாக செயல்படுகின்றன. அதிலும் குறிப்பாக திருச்சியின் முன்னணி தனியார் மருத்துவமனைகளான காவேரி மெடிக்கல் சென்டர் மற்றும் அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இத்திட்டத்தின் செயல்பாடு கேள்விக்குறியாகவே உள்ளதாக தெரிகிறது. நம்மைக்காப்போம் -48 திட்டம் குறித்து இங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்களிடம் கேட்டால் முறையான பதில் கிடைப்பதில்லை.முதலில் கையில் இருக்கும் பணத்தை கட்டுங்கள் பிறகு க்ளைம் செய்து கொள்ளலாம் எனக்
கூறுகின்றனர். பிறகு இத்திட்டம் குறித்து கேட்டு அலைந்து திரிந்தாலும் முறையான பதிலோ வழிகாட்டுதல்களோ கிடைப்பதில்லை. சாலை விபத்தால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலும் தலை, கை, கால் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு ஐ.சி.யூவில் அட்மிட் செய்யப்பட்டிருப்பார்கள். வெளியில் இருக்கும் நோயாளிகளின் உறவினர்களோ எப்படியாவது உயிரை காப்பாற்றுங்கள், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. என்கிற மனநிலையில்தான் இருப்பார்கள். இவர்களின் இந்த உயிர் பயத்தை சில தனியார் மருத்துவமனைகள் காசாக்கிக் கொள்கின்றன. எனவே திருச்சி மாவட்டத்தில் “நம்மைக் காப்போம் -48” திட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ள 24 மருத்துவமனைகளிலும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சிறப்புக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இத்திட்டத்தின் உண்மையான நோக்கம் முழுமையாக நிறைவேறும் என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்