திருச்சியில் இருந்து சபரிமலைக்கு 51-ம் ஆண்டாக குருசாமி கே.கிருஷ்ணன் தலைமையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்..! (வீடியோ இணைப்பு)
திருச்சி, ஐயப்பன் நகர், நேதாஜி தெருவை சேர்ந்தவர் குருசாமி கே.கிருஷ்ணன். தீவிர ஐயப்ப பக்தரான இவர் திருச்சியில் இருந்து சபரிமலைக்கு கடந்த 50 ஆண்டுகளாக தனது பக்தர்களுடன் இணைந்து பாதயாத்திரை சென்று வருகிறார். அந்தவகையில் இந்த ஆண்டும் 51ம் ஆண்டாக குருசாமி கே.கிருஷ்ணன் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். கார்த்திகை 1-ம் தேதி ஆரம்பித்தாலே குருசாமி கிருஷ்ணன் வீட்டில் ஐயப்ப பக்தர்கள் குவிந்து விடுவார்கள். ஐயப்பன் பஜனை, ஐயப்பன் பாடல்கள் என நிகழ்ச்சிகள் களை கட்டும். அந்தவகையில் கார்த்திகை ஒன்றாம் நாளான இன்று( நவம்பர் 17) ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததோடு குருசாமி கிருஷ்ணனிடம் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் குருசாமி கிருஷ்ணன் இல்லத்தில் ஐயப்ப பஜனை நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து சுமார் 2,500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனை குருசாமி கிருஷ்ணன், அவரது மகன் பாலாஜி மற்றும் ஸ்ரீ சபரிமலை பாதயாத்திரை குழுவினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து குருசாமி கிருஷ்ணன் தலைமையில் ஏராளமான பக்தர்கள் டிசம்பர் 15ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலை நோக்கி பாதயாத்திரை புறப்படுகின்றனர். அவர்கள் ஒரு நாளைக்கு 25 கிலோ மீட்டர் வீதம் 415 கிலோ மீட்டர் தூரத்தை 17 நாட்களில் கடந்து சபரிமலை ஐயப்பன் கோயிலை அடைகின்றனர். அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அங்கிருந்து திருச்சி புறப்படுகின்றனர். இன்று நடைபெறும் ஐயப்ப பஜனை நிகழ்ச்சியில் அனைத்து ஐயப்ப குருசாமி மார்களும், சாமி மார்களும், நண்பர்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அய்யன் ஐயப்பனின் அருள் ஆசி பெற ஸ்ரீ சபரிமலை பாதயாத்திரை குழுவின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.