Rock Fort Times
Online News

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெல்லும்…

திருச்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை திமுக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார். இதற்காக தமிழகத்தில் உள்ள திமுக மாவட்டங்களை 5 மண்டலமாக பிரித்து மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளருக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் , அருகே உள்ள ராம்ஜி நகரில் இன்று ( 26.07.2023 ) நடைபெற்றது. இதற்காக 11 ஏக்கரில் சுமார் 13,000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை வரை நடந்தது. இந்த கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் வடக்கு, தெற்கு, மத்திய, திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு ஆகிய 15 திமுக மாவட்டத்திற்கு உட்பட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து 1245 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு வரவேற்று பேசினாா்.

இக்கூட்டத்தில் திமுக தலதலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:-

உங்களது கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவில் இந்த ஆட்சி நடந்து வருகிறது. எங்களுக்குள் குறை இருக்கலாம். ஆனால், ஆட்சியில் எந்த குறையும் இருக்காது. இதற்கு முன்பு நான் பயணம் செல்ல போனால் ஆயிரக்கணக்கான மனுக்கள் தருவார்கள் . தற்போது அது நூற்றுக்கணக்காக மாறி விட்டது.இதுவே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பொய் சொல்பவர்கள், குறை கூறுபவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும் . ஆனால் நீங்கள் நம் சாதனையை சொல்லுங்கள். சமூக ஊடகம் தான் இன்று சிறப்பான தளமாக உள்ளது .சமூக வளைதளங்களில் கணக்கு தொடங்குங்கள். கண்டிப்பாக அதில் பதில் பேசுங்கள், நலத்திட்டங்களை பேசுங்கள். காலம் மாறி இருக்கிறது. எல்லாம் வாட்ஸ் ஆப்பில் பேசுகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ ஆளுநர் ஒருபக்கம் நமக்கு எதிராக பேசி வருகிறார் . ஆளுநர் தேர்தல் வரை கூட இருக்கட்டும்.நமக்கு இன்னும் வாக்குகள் அதிகரிக்கும். நம் தொண்டர் பலம் போல் தமிழகத்தில் அல்ல, இந்தியாவிலேயே அல்ல , உலகிலேயே இல்லை. மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் கண்டிப்பாக இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது .தமிழகத்தில் சட்ட பேரவை, அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள்.

மாநிலங்களில் பல்வேறு மொழி,பல்வேறு கலாச்சாரத்தில் உள்ள அனைவருக்கும் எதிரான கட்சி தான் பா.ஜ.க. 26 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். இந்தியாவை ,காப்பாற்றபோவது இந்த இந்தியா கூட்டணி தான். மத்திய பிரதேசம் சென்றாலும் மோடி திமுகவை தான் திட்டுகிறார். இது வாரிசுகளுக்கான கட்சி தான் ,ஆரியத்தை வீழ்த்த பெரியாரின் வாரிசுகள், அண்ணாவின் வாரிசுகள். குஜராத்தில் நடந்ததை தற்போது மணிப்பூர் நினைவிற்கு கொண்டு வருகிறது. பழனிச்சாமியை பக்கத்தில் வைத்து கொண்டு ஊழலை பற்றி பிரதமர் பேசுகிறார் .

 இவர்களை இந்த தேர்தலில் நாம் முழுமையாக தோற்கடிக்க வேண்டும். முத்துவேல் கருணாநிதியின் போர்படை தளபதிகள் நீங்கள் . உங்களை நம்பி தான் நான் இந்த பொறுப்பை கொடுத்து இருக்கிறேன். இந்தியா வெல்லும் அதை 2024 சொல்லும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, ஆ.ராசா எம்பி உள்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வெள்ளி கேடயம் மற்றும் வெள்ளி வாளையும் அமைச்சா் கே.என் நேரு வழங்கினாா்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்