திருச்சி விமான நிலையத்தில் தொழுகைக் கூடம் திறப்பு- துரை வைகோ எம்.பி.க்கு ம.ஜ.க. நிர்வாகிகள் பாராட்டு …!
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் உருவாகியுள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து குவைத், சவுதி அரேபியா, பக்ரைன், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நாடுகளுக்கு முஸ்லிம் பயணிகள் பெருமளவு பயணம் மேற்கொள்கின்றனர். ஆகவே, விமான நிலையத்தில் தொழுகை கூடம் மற்றும் ஓடுபாதை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்பி- ஐ சந்தித்து கோரிக்கை வைத்தார். அவ்வாறு ஓடுபாதை விரிவுபடுத்தப்பட்டால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ் ,மலேசியன் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்லைன்ஸ் , எத்திஹாத், கல்பு ஏர், லுப்டான்சா போன்ற உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களும் விமானங்களை திருச்சிக்கு இயக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும் எடுத்துரைத்தார்.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடம் துரை வைகோ எம்பி வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் விமான நிலையத்தில் தொழுகை கூடம் அமைக்கப்பட்டது. தொழுகை கூடத்தை துரை வைகோ எம்பி திறந்து வைத்தார். இதனால் ,மகிழ்ச்சி அடைந்த மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, துரை வைகோ எம் பி-ஐ சந்தித்து தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
அதேபோல, கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் மஜகவினர் நேரில் சென்று தங்களுடைய பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். அப்போது இளைஞர் அணி மாநில செயலாளர் திருச்சி ஷரிப் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.