திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி முத்தமிழறிஞர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டது. “கலைஞர் 100” என்ற தலைப்பில் 100 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு 101வது நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் இதுவரை இரண்டு சட்டமன்ற தொகுதியில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டு உள்ளது. தற்போது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது சிலை காட்டூர் அருகில் நிறுவப்பட்டுள்ளது. திருவுருவ சிலையை கருணாநிதியின் நினைவு நாளான நாளை(07-08-2024) காணொளி காட்சி வாயிலாக கழக தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் காலை 8-30 மணி அளவில் திறந்து வைக்க உள்ளார். விழாவானது, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்,வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய, நகர, பேரூர் கழக தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.