திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை பகுதி 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மண்டல குழு தலைவரும், கிழக்கு மாநகர திமுக செயலாளருமான மு.மதிவாணன் தலைமை தாங்கினார். பொன்மலை பகுதி செயலாளர் கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் முன்னிலை வகித்தார். குறைதீர்க்கும் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளில் இந்த பொன்மலை பகுதிகளில் சுமார் ரூ.9 கோடியே 23 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, அங்கன்வாடி, சமுதாயக்கூடம், ஊரக சுகாதார நிலையம் கட்டுதல், நாய்கள் கருத்தடை மையம் அமைத்தல், உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். இருந்தபோதிலும் பொதுமக்களின் அனைத்து குறைகளையும் தீர்க்க முடியுமா? என்றால் அதற்கு ஒரே தீர்வு இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தான்.
ஆகவே, இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக நானும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களாகிய உங்களை நேரில் சந்தித்து உங்களின் குறைகளை ஒரே இடத்தில் கேட்டறிந்து அதை அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்து அதற்கு உடனடி தீர்வு காண்பதற்காக வந்துள்ளோம். பெற்றுக்கொள்ளப்படும் மனுக்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளும் அரசு அதிகாரிகளிடம் உடனடியாக வழங்கப்பட்டு அதற்கான தீர்வு வெகு விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ் ,சீதாலட்சுமி முருகானந்தம், வட்ட செயலாளர்கள் முருகானந்தம், பரமசிவம் , முருகன், தமிழ்மணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.