Rock Fort Times
Online News

மோடியை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு…!

டி. ஆர். பாலு எம்.பி. 'ஓபன் டாக்'...

கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் கொடியேற்று விழா மற்றும் கலைஞர் சாதனைகள் ஆய்வரங்கம் நேற்று ( 23.08.2023 ) நடைபெற்றது. திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியை கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான டி. ஆர்.பாலு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூா் ஷா நவாஸ் , திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற ஆய்வரங்கத்தை தொடக்கி வைத்து பேசிய டி.ஆர்.பாலு, அய்யா என என்னை அழைக்கிறார்கள். அய்யா என்றால் அது தந்தை பெரியார் மட்டும் தான். வேறு யாரும் அதற்கு ஈடாக மாட்டார்கள். தற்போது 30 பேர் மட்டுமே தி.மு.க எம்.பி.க்கள் இருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க.வில் 303 பேர் இருக்கிறார்கள். மோடி நாடாளுமன்றத்திற்கு வந்தால் அவர் கட்சியினர் ஆரவாரத்துடன் அவரை வரவேற்கிறார்கள். மோடியை பார்த்தால் பொறாமையாக உள்ளது. அந்த பொறாமை நம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். அப்போது தான் வீரியமாக வேலை செய்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய முடியும். இன்று வட இந்தியாவில் இருக்கும் எம்.பி.க்கள் பலர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து எங்களிடம் கேட்கிறார்கள். கலைஞர் கொண்டு வந்த திட்டங்களும், இனி அவர் பெயரால் கொண்டு வரக்கூடிய திட்டங்களாலும் கருணாநிதி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் என்றார்.

ஆளூர் ஷா நவாஸ் பேசுகையில், கருணாநிதி குறித்து வேண்டுமென்றே பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் வாரிசு அரசியலை புகுத்தியவர் ராஜாஜி தான். ஊழலுக்காக சிறை சென்றவர் ஜெயலலிதா. பா.ஜ.க வின் புரட்டு அரசியலை விரட்ட கலைஞர் அரசியலை நாம் தொடர்ந்து பேச வேண்டும். வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றும் வகையில் நீட் ரத்து மசோதாவை சட்டமன்றத்தில் தி.மு.க அரசு நிறைவேற்றி விட்டது. இனி குடியரசு தலைவர் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார்.

சுப.வீரபாண்டியன் பேசுகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை உச்ச நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அண்ணா தொடங்கி வைத்த திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தியவர் கலைஞர். அதை இன்னும் விரிவாக்கிக் கொண்டிருப்பவர் தற்போதைய முதலமைச்சர். நீட் தேர்வு கேதான் தேசாய் என்பவாரால் உருவாக்கப்பட்டது. அவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். ஊழல்வாதியால் உருவாக்கப்பட்டது தான் நீட் தேர்வு. காங்கிரஸ் கூட்டணி அரசுதான் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். ஆனால், அந்த கூட்டணியில் அங்கம் வகித்த போதும் நெஞ்சிரத்தோடு அந்த தேர்வை எதிர்த்தவர் கருணாநிதி. பா.ஜ.க அரசு 75 ஆயிரம் லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது என சி.ஏ.ஜி.அறிக்கை கொடுத்துள்ளது. அது குறித்து யாரும் பேச மறுக்கிறார்கள். பா.ஜ.கவிடமிருந்து இந்த நாட்டை காக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் தி.மு.க வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்