திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சபெருமாள்பட்டி ஊராட்சி பனந்தோப்பு பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைகோ கட்டுகளை வாங்குவதற்காக சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கீரிப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அயோத்தி (32) சரக்கு வேனை தானே ஓட்டிக்கொண்டு நடராஜன் தோட்டத்திற்கு வந்துள்ளார். அவரிடம் இருந்து 140 வைக்கோல் கட்டுகளை வாங்கி வேனில் ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். தோட்டத்திலிருந்து சாலைக்கு வரும் வழியே குறுக்கே சென்ற மின் கம்பிகளின் மீது வேனில் இருந்த வைக்கோல் கட்டுகள் உரசியதால், வைக்கோல் தீ பற்றியது. காற்று பலமாக வீசியதால் வேனிலிருந்த வைக்கோல் கட்டுகளில் தீ மளமளவென பரவியது. சரக்கு வேனை காப்பாற்றும் முயற்சியில் அயோத்தி வேனை ஒட்டிக்கொண்டு அருகில் வயலுக்கு நீர் இறைத்து கொண்டிருந்த மின் மோட்டாருக்கு சென்ற பொழுது, வேனில் இருந்த தீ, வயல்வெளிகளிலும், அர்ஜுனன் என்பவரது தோட்டத்தில் இருந்த வைக்கோல் போரிலும் பரவியது. தகவலின் பேரில் உப்பிலியபுரம் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரைப் பீச்சி அடித்து இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இருப்பினும் அர்ஜுனனுக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சம் பெறுமான 300 கட்டுகள் கொண்ட வைக்கோல் போர், சுமார் 3 லட்சம் பெறுமான வைக்கோல் சுற்றும் எந்திரம் மற்றும் வயல்வெளிகளில் இருந்த சுமார் நூறு வைக்கோல் கட்டுகள் ஆகியவை தீயில் முற்றிலும் எரிந்தன. தீ விபத்து பற்றி உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வயல்களில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக தென்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments are closed.