Rock Fort Times
Online News

கோட் பட கேரக்டரா? அமைச்சரா?… அதிமுக கேள்வி..!

பேருந்து தாமதம் குறித்து புகார் தெரிவித்த பயணியிடம் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஒருமையில் அளித்த பதில், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பயணிகளிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தியது. பக்ரீத் பண்டிகை, முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்துகளின் இயக்கம் குறித்தும், பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நடைமேடையில் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள், போதிய பேருந்துகள் இல்லை என அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுரை, திருச்சி, தூத்துக்குடி, காரைக்குடி, கும்பகோணம், துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் வரவில்லை என்றும், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளும் குறித்த நேரத்திற்கு வராததால் நீண்ட நேரமாக காத்திருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் தமிழன் பார்த்திபன், நடைமேடையில் காத்திருந்த பயணிகளிடம் “எங்கு செல்கிறீர்கள்?” எனக் கேட்டறிந்தார்.

மேலும், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில் முன்பதிவு செய்யாத பயணிகளையும் ஏற்றி அனுப்பியதால், முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதியடைந்ததாக கூறப்படுகிறது. அப்போது பயணி ஒருவர், “துறையூர் பகுதிக்கு செல்ல நான் முன்பதிவு செய்திருந்தேன். எனது பேருந்து இரவு 10.30 மணிக்கு வர வேண்டும். ஆனால் தற்போது 11.45 ஆகியும் பேருந்து குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோதும் முறையான பதில் கிடைக்கவில்லை” என அமைச்சரிடம் முறையிட்டார். அதற்கு அமைச்சர், “நீ நல்லா சாப்பிட்டு இருக்க; நான் இன்னும் சாப்பிடல” என பதிலளித்தார். இவ்வாறு அவர் ஒருமையில் பேசியது அங்கிருந்த பயணிகள் மத்தியில் முகச் சுளிப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி கண்டனங்களை பெற்று வருகிறது. இதுகுறித்து அந்த பயணி கூறுகையில், “அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை. ஆய்வு செய்ய வந்த அமைச்சரிடம் கேட்டபோதும் அலட்சியமாக பதிலளித்தது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,981 பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் ஒரே வழியில் பேருந்துகள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் பேருந்து நிலையத்திற்குள் மாற்று வழியில் பேருந்துகளை கொண்டு வர ஏற்பாடுகள் செய்வது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது” என கூறினார்.

இதற்கிடையில், அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று மக்கள் அமைச்சரிடம் குற்றச்சாட்டு வைத்தால், அதை நிவர்த்தி செய்ய உறுதி அளிப்பதே அமைச்சரின் பொறுப்பு. ஆனால், த.வெ.க அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரோ, அதிகாரத் திமிரோடு கேள்வி கேட்ட இளைஞரை அவமானப்படுத்தி பேசுகிறார். ‘நீ நல்லா சாப்பிட்டிருக்க’ என்று சொன்னால் என்ன அர்த்தம்? என்ன விதமான அசிங்கமான தோரணை இது? GOAT படத்தில் நீங்கள் நடித்த Traffic Police கதாபாத்திரம் போலவே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இது ஒன்றும் சினிமா இல்லை; மக்கள் பணி என்பதை கொஞ்சமாவது உணருங்கள்” என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்