“அதிமுக எங்கள் உயிர் மூச்சு; கட்சியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வோம்”- எஸ்.பி.வேலுமணி..!
எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் அணிகள் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று (மே.27) இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நடைபெற்ற ஆலோசனையில் சமாதானம் எட்டப்பட்டதை தொடர்ந்து, இருதரப்பினரும் ஒன்றாக இணைந்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் அளித்தனர். அதில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அதிமுக கொறடாவாகவும் நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியையும், கொறடாவாக விஜயபாஸ்கரையும் நியமிக்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை எஸ்.பி.வேலுமணி தரப்பினர் வாபஸ் பெற்றனர். அதேபோல், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த கட்சித் தாவல் நடவடிக்கை மனுவையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாபஸ் பெற்றது.
இதன் மூலம், பிளவுபட்டிருந்த அதிமுக மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருங்கிணைந்துள்ளது. இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் இன்று (மே 28) செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “என்னை தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெறச் செய்த தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி. அதிமுக எங்கள் உயிர் மூச்சு. எங்களுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். சில கோரிக்கைகளை வைத்திருந்தோம்; அவற்றை ஏற்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். கட்சியை வலுப்படுத்தி, தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்து மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். நாங்கள் பதவிக்காக தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை. மக்கள் அளித்த ஆதரவின் அடிப்படையில்தான் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். நாங்கள் எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்” என்று கூறினார்.

Comments are closed.