முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ( 09-06-2023) தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் காவிரி பாசன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மாவட்டம் கூழையார் வடிகால், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலிருந்து வரும் மழை நீரினை உப்பாறு மற்றும் மேல்பங்குனி வடிகால் வழியாக பெற்று வடிய வைக்கும் வடிகாலாக உள்ளது. இவ்வடிகாலானது திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் கிராமத்தில் திருமங்கலம் அணைக்கட்டிலிருந்து தொடங்கி பூவாளுர், காட்டூர், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, செம்பரை, திண்ணியம், செங்கரையூர், டி.கல்விக்குடி வழியே 15,200 மீ. நீளம் சென்று கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது.
மேலும், கடந்த காலங்களில் திருச்சி, பெரம்பலூர் சுற்று பகுதிகளில் பெய்த பெரும் மழையின் காரணமாக கூழையார் வடிகாலில் கரை அரிக்கப்பட்டு வெள்ள நீர் விவசாய நிலங்களிலும், கிராமப்பகுதிகளிலும் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல, கொள்ளிடத்தில் முக்கொம்பு மேலணையில் இருந்து திறக்கப்படும் அதிகப்படியான வெள்ள நீரானது, கூழையாற்றின் வடிகால் தண்ணீரை கொள்ளிடத்தில் கலக்காதவாறு தடுக்கிறது. அதனால் 14,310 மீ முதல் 15,200 மீ வரை கூழையாற்றின் வெள்ள நீரானது கூழையாற்றின் இருபக்கங்களிலும் புகுந்து விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கூழையார் வடிகாலை தூர்வாரி கரையினை பலப்படுத்தினால் மட்டுமே வருங்காலங்களில் வரும் வெள்ள நீரினால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இயலும். மேலும் மழைநீர் சுலபமாக கூழையாற்றில் வடியவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் , தூர்வாரும் திட்டத்தின் கீழ் கூழையார் வடிகால் 890 மீட்டருக்கு ரூ. 23.50 லட்சத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், லால்குடி சட்டமன்ற உறுப்பினா் சவுந்தரபாண்டியன், நீா்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளா் சந்தீப் சக்சேனா, திருச்சி மாவட்ட கலெக்டர் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் மற்றும் என்ஜினியர்கள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.