Rock Fort Times
Online News

திருச்சி நவல்பட்டு சாலையில் மூட்டை, மூட்டையாக தேங்கி கிடக்கும் குப்பைகள்…

மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை....

திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் உள்ள வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வார்டு எண் 41 தீபம் காம்ப்ளக்ஸ் வணிக வளாகம் பின்புறம், நவல்பட்டு செல்லும் சாலையில் பனை மரத்து கருப்பு கோவில் அருகில் வைத்து விடுவார்கள். அதனை சம்பந்தப்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், அதற்கான வாகனத்தில் வந்து நாள்தோறும் எடுத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் போதிய பணியாளர்கள் இல்லை என காரணம் கூறி திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள சாக்கு மூட்டை குப்பைகளை எடுத்துச் செல்லாததால் பல நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இப்படி துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி வழியாக நாள்தோறும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக மழையும் பெய்து வருகிறது. இதனால் குப்பைகள் அழுகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும், அப்பகுதியிலுள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவு தேங்கியுள்ளது. இதுவும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாய் தண்ணீர் ஓடாமல் சாலைகளில் வழிந்து ஓடும் அவல நிலையும் ஏற்பட்டு உள்ளது.

எனவே, திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஐ.ஏ.எஸ்., போர்க்கால அடிப்படையில் திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் குவிந்து கிடக்கும் குப்பை மூட்டைகளை உடனடியாக அகற்றி அந்த பகுதியில் உருவாகிவரும் சுகாதார சீர்கேட்டை தடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும், அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தேங்கி உள்ள குப்பைகளை அகற்றுவதுடன், கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடாமல் தடுப்பதுடன், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவுவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்