தமிழ் திரை உலகில் கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் அரசியலில் கால் பதித்து எம்எல்ஏ வாகவும், இளைஞர் அணி செயலாளராகவும், அமைச்சராகவும் உயர்ந்தார். இன்றைய தினம்(29-09-2024) துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதேபோலத்தான் அவரது தந்தை மு.க.ஸ்டாலினும் இளைஞர் அணி செயலாளராக இருந்து பின்னர் எம்எல்ஏவாகி, அமைச்சராகி, துணை துணை முதலமைச்சர் ஆகி தற்போது முதலமைச்சர் ஆக பதவி வகித்து வருகிறார். அவர்கள் இருவரும் கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம். முத்தமிழ் அறிஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளராக திறம்பட கட்சி பணியாற்றியவர் மு.க.ஸ்டாலின். பின்னர் எம்எல்ஏவாகி, அமைச்சரானார். பின்னர் மு.க.ஸ்டாலினை 2009-ம் ஆண்டு துணை முதல்வராக அறிவித்தார், முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதேபாணியில் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரையில், 1984-ல் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர் 1989-ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2006-ம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரையில், 2019-ல் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர் 2021-ல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2022-ம் ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் 2024-ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதியான இன்று துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.
Comments are closed.