திருச்சியை தலைமையிடமாக கொண்டு எல்பின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் கிளை அலுவலகங்கள் சென்னை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகமான வட்டி கிடைக்கும், பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல கவர்ச்சியான விளம்பரங்கள் செய்யப்பட்டதை நம்பி ஆயிரக்கணக்கானோர் இந்த நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால் அந்த தொகைக்கான வட்டியோ, இரட்டிப்புத் தொகையோ அந்த நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படவில்லையென புகார்கள் எழுந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த கிளைகளும் மூடப்பட்டன. இதில் சுமார் ரூ.100 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு சமீபத்தில் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது. இதன் அடிப்படையில் எல்பின் நிதி நிறுவன நிர்வாகிகள் சுரேஷ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய நிர்வாகியான ராஜாவும் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எல்பின் நிறுவன உரிமையாளர் என்று தொழிற்சாலை விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட திருச்சியைச் சேர்ந்த ஜானி பாட்ஷா (57) என்பவரை நேற்று ( 07.06.2023 ) போலீசார் கைது செய்து மதுரை உயா்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேற்கண்ட தகவல் காவல் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.