Rock Fort Times
Online News

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் மாணவர்கள் அவதி….

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள, 143 கல்லூரிகளில் இப்பல்கலைக்கழகம் கல்வியாட்சி புரிந்து வருகிறது.

இதில், 123 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 3 நுண்கலைக் கல்லூரிகளும் அடங்கும். இவற்றுள், 8 அரசுக் கல்லூரியும், 11 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், தன்னாட்சி நிறுவனங்களாக செயற்பட்டு வருகின்றன.

இதைத் தவிர்த்து, 8 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளையும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திவருகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இங்கு படித்து முடித்த இளநிலை, முதுகலை பட்டப் படிப்பு முடித்த, 2 லட்சம் மாணவர்களுக்கு இதுவரை பட்டங்கள் வழங்கப்படவில்லை.

இதனால் மாணவர்கள் உரிய வேலைக்கு செல்ல முடியாமலும், மேற்படிப்பிற்கு வெளிநாடு செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லை.

‘தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழாவிற்கு ஒப்புதல் அளிக்காததே நீளும் தாமதத்திற்கு காரணம் என்றும், உயர்கல்வித்துறை அமைச்சரகத்திற்கும், ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே நடக்கும் பனிப்போரால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறும் போது..

“இரண்டு ஆண்டுகளாக ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் அளிக்கவில்லை என்றால், அந்த துணைவேந்தர் செயல்படவே இல்லை என்று அர்த்தம்.

இது பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கம். எனவே, துணைவேந்தரை புறந்தள்ளி, சிண்டிகேட் உறுப்பினர்கள், செனட் உறுப்பினர்கள் ஒன்றுக் கூடி பட்டமளிப்பு விழாவை போர்க்கால அடிப்படையில் நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுகுறித்து துணைவேந்தர் செல்வம் அலுவலகத்தில் விசாரித்த போது,..

“பாரதிதாசன் பல்கலையில் பட்டமளிப்பு, 2 ஆண்டுகளாக நடக்கவில்லை என்பது உண்மைதான். கூடிய விரைவில் பட்டமளிப்பு விழாவை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

அதற்கிடையில் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ‘Provisional certificate’ என்ற தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது.

கட்டாயம் பட்டம் தேவைப்படும் மாணவர்களுக்கு, ஆளுநர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று பட்டங்கள் உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

பட்டமளிப்பு விழா தாமதம் ஆவதற்கு, ஆளுநர் அலுவலகத்தில் ஒப்புதல் அளிக்காததே காரணம் என்பது தவறான தகவல்.

ஆளுநர் அலுவலகத்தில் பட்டமளிப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.

துணை ஜனாதிபதி நிலையில் உள்ள ஒரு சிறப்பு விருந்தினரை பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்து உள்ளோம்.

அவரது வருகைக்கான தாமதம் காரணமாகவே பட்டமளிப்பு விழா தள்ளிப் போகிறது. கூடிய விரைவில் பட்டமளிப்பு விழாவை மிகச் சிறப்பாக நடத்துவோம்” என்கின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்