Rock Fort Times
Online News

பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் நான்கு முழ வேட்டியா?, எட்டு முழ வேட்டியா? சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்…!

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்காகவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டும் ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் ஒரு கணிசமான தொகை ஒதுக்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தை ஆண்ட அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் விலையில்லா, வேட்டி சேலைகளை வழங்கி உள்ளன. இந்த ஆண்டு முதல் முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்க உள்ளது. இந்த வேட்டி மற்றும் சேலைகள் மிகவும் தரமாக உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், சேலையில் பட்டு ஜரிகை சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வேட்டி எட்டு முழமாக இல்லாமல் நான்கு முழமாக தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சட்டமன்றத்தில் விவாதம்,

இதுதொடர்பாக இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பேசுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெசவாளர்கள் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டிகளின் அளவை 8 முழத்திலிருந்து 4 முழமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சில அதிகாரிகளால் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் ஃபார்மாலிட்டி’க்காக மட்டுமே கையெழுத்து பெறப்பட்டுள்ளது. நாகர்கோவில், கடலூர், திருச்செங்கோடு, சேலம், காஞ்சிபுரம் ஆகிய 5 சரகப் பகுதிகளில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 8 முழ வேட்டிகள் ஏற்கனவே நெய்யப்பட்டு தேங்கியுள்ளன. நாகர்கோவில் சரகத்தில் மட்டும் ரூ.7 கோடி மதிப்பிலான வேட்டிகள் முடங்கியுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், 7 மாதங்கள் தாமதித்து இத்தகைய புதிய அரசாணையை வெளியிட்டதன் நோக்கம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளிக்கையில், மக்களுக்கு தரமான வேட்டி, சேலை வழங்குவதே எங்களது நோக்கம். பொங்கலுக்கு ஜரிகை வைத்த சேலை வழங்கப்பட உள்ளது. நாங்கள் கொடுக்கும் வேட்டிகளை அமைச்சர்கள் அணிந்து வருவோம். கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட வேட்டிகளை எதிர்க்கட்சிகள் அணிய வேண்டும். எது தரமான வேட்டி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மக்கள் 8 முழ வேஷ்டிக்கு பதிலாக 4 முழ வேஷ்டியை தான் விரும்புகிறார்கள் என்று பதில் அளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்