திருச்சி என்.எஸ்.பி ரோட்டில் தலைவிரித்தாடும் தரைக்கடை ஆக்கிரமிப்பை எதிர்த்து நவம்பர் 7ம் தேதி 10 ஆயிரம் பேரை திரட்டி தர்ணா போராட்டம்… தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜூலு அறிவிப்பு..!
திருச்சியின் மிக முக்கிய வணிகப் பகுதிகளில் ஒன்றாக என்.எஸ்.பி ரோடு, சிங்காரத்தோப்பு, மலைக்கோட்டை உள்ளிட்ட இடங்கள் விளங்குகின்றன. இங்கு ஆடைகள், பர்னிச்சர்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்வார்கள். ஆனால், சமீபகாலமாக என்.எஸ்.பி ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் நுழையக்கூட முடியாத அளவுக்கு தரைக்கடை வியாபாரிகள் மாநகராட்சியின் சாலையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பெருநிறுவனங்களின் வியாபாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தரைக்கடை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வருகிற நவம்பர் 7ம் தேதி 10 ஆயிரம் பேரை திரட்டி மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜூலு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருச்சியில் இன்று( நவ. 5) செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்சி, என்.எஸ்.பி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.இங்கு மொத்தமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர். அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய தொழில் வரி, சொத்து வரி, கரண்ட் பில், ஜி.எஸ்.டி உள்ளிட்டவற்றை செலுத்தி முறையாக தொழில் செய்து வருகிறோம். ஆனால், கடந்த முப்பதாண்டுகளாக திருச்சி, என்.எஸ்.பி ரோட்டை தரைக்கடை வியாபாரிகள் முழுமையாக ஆக்கிரமித்து பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தினோம். வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருச்சி என்.எஸ்.பி ரோடு, தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றவும், அப்பகுதியை தரைக்கடை வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட பகுதியாகவும் அறிவித்தது. இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இங்கிருந்த ஆக்கிரமிப்புகள் மாவட்ட நிர்வாகத்தால் முழுமையாக அகற்றப்பட்டது. தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்காக மலைக்கோட்டையை சுற்றி 5 இடங்களில் கடைகள் அமைப்பதற்கான இடத்தையும் திருச்சி மாநகராட்சி வழங்கியது. ஆனால், தற்போது தீபாவளியை காரணம் காட்டி மீண்டும் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்பு தலைவிரித்து ஆடுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், ஷாப்பிங் செய்ய வருபவர்கள் காவல்துறையினரால் பாதியிலேயே திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் வழக்கமாக தீபாவளி சீசனில் நடைபெறும் வியாபாரத்தில் 70 சதவிகிதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் இப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக சுமூகமான தீர்வுகாண வேண்டும். இல்லையெனில் திருச்சி, என்.எஸ்.பி ரோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் புற்றீசல் போல பெருகியுள்ள தரைக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும், எளிய வியாபாரிகள் போர்வையில் மாநகராட்சி சாலையை உள்வாடகைக்கு விட்டு லட்சக்கணக்கில் கல்லா கட்டும் மோசடி பேர்வழிகளை கண்டித்தும், சுமார் 10 ஆயிரம் பேரை திரட்டி சாலையில் அமர்ந்து மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். என்றார்.

Comments are closed.