தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 8-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். திருச்சியை பொறுத்தவரை என்.எஸ்.பி.ரோடு மற்றும் சூப்பர் பஜார் பகுதிகளில் பிரபல ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், பர்னிச்சர் கடைகள், பாத்திரக் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கு திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். வழக்கமாக விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் ஜவுளிகள், பட்டாசு ரகங்கள், இனிப்புகள் வாங்க இந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ஆகவே, குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு தெப்பக்குளம் பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு நவீன கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
வணிக வளாகங்களில் நடமாடும் எக்ஸ்ரே ஸ்கேனர் மூலம் உடைமைகள் சோதனை செய்யப்படுகின்றன. பட்டாசு கடைகளிலும் தீயணைப்பு மற்றும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் யாராவது உங்களைப் பின்தொடர்ந்தால்
அதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.