Rock Fort Times
Online News

கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டை அணியாமல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்…!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேசிய தென்னிந்திய விவசாயிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மேகராஜன் உட்பட 25க்கும் மேற்பட்டோர், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது:-

2016ல் ஏற்பட்ட வறட்சியின்போது விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக கையெழுத்தை போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது. ஆகையால் விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால் தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக சாகுபடி செய்தும், குடியிருந்து வரும் விவசாயிகளை வெளியேற்றாமல் வீட்டிற்கு வாடகையும், குத்தகைதாரராக பதிவு செய்து விவசாயிகளையும், பொது மக்களையும் காப்பாற்ற வேண்டும். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100 வழங்க வேண்டும். காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது. காவிரியில் மாதா மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். இதற்காக டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்