அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்…
திருக்குவளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...
தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பசியோடு படிக்க கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி கல்வி பயின்ற நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள தொடக்கப்பள்ளியில் இன்று (25.08.2023 ) காலை தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாணவ- மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். பின்னர் நான் யார் என்று தெரிகிறதா?, என்ன படிக்கிறீர்கள், உணவு ருசியாக இருக்கிறதா?, வகுப்பு ஆசிரியை நன்றாக பாடம் சொல்லிக் கொடுக்கிறாரா? என்று கேள்வி கேட்டார். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு சாக்லேட் கொடுத்து விடை பெற்றுச் சென்றார். அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், காலை உணவு விரிவாக்க திட்டத்தை அந்தந்த பள்ளிகளில் தொடங்கி வைத்தனர்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைச்சர் கே.என்.நேரு 195 பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் , மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதரணி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி போலீஸ் காலனி நவல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சேர்மன் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் கங்காதரன், பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு சண்முகம், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.