கொலையில் முடிந்த பகை ! லால்குடியில் நண்பரை கொலை செய்த ரவுடி திருச்சி சிறுகனூர் அருகே பதுங்கல்! துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவரும் ஆதிகுடியை சேர்ந்த ராஜா என்ற கலைப்புலி ராஜாவும் நண்பர்கள். ஆனால், இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நவீன், கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் லால்குடி மதுபான கடை அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது நவீனுக்கும் ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில், படுகாயம் அடைந்த நவீன் குமார் மருத்துவமனைக்கு, செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஆங்கரை பகுதியைச் சேர்ந்த கலைப்புலி ராஜாவின் நண்பர்களான ஸ்ரீநாத், பாலா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சரித்திர பதிவேடு குற்றவாளியும் ரௌடியுமான லால்குடி கோவிந்தாபுரத்தை சேர்ந்த ராஜா என்கிற கலைப்புலி ராஜாவை போலீசார் தேடி வந்தனர். அவர், திருச்சி,சிறுகனூர் வனப்பகுதியில் மறைந்திருப்பதாக போலீஸருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் காவலர்கள் பதுங்கியிருந்த ராஜாவை கைது செய்ய முயன்றபோது ராஜா அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றார். அப்போது ஆய்வாளர் சரவணன் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக ராஜாவின் வலது காலில் சுட்டதில் பலத்த காயம் அடைந்த ராஜா சுருண்டு கீழே விழுந்தார். காயமடைந்த ரவுடி ராஜா, லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில்,மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments are closed.