ஸ்ரீரங்கத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து குடிசை வீடுகள்: கழிவுநீர் தேங்கி டெங்கு கொசுக்களின் கூடாரமாய் மாறியதால் பொதுமக்கள் அவதி…* திருச்சி மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!
திருச்சி, ஸ்ரீரங்கம் 3-வது வார்டுக்குட்பட்டது மல்லிகைப்பூ அக்ரஹாரம். இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர். மல்லிகைப்பூ அக்ரஹாரத்தின் 3வது குறுக்குத்தெரு விஸ்தரிப்புப் பகுதியில் 30 அடி அகலமுள்ள பொதுப்பாதை இருந்தது. இதன்மூலம் அடுத்த குறுக்குத் தெருவை எளிதாக அடைந்து விடலாம். ஆனால் இந்த பொதுப்பாதையை ஆக்கிரமித்து தற்போது 10க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு முறையான வழி இல்லாததால் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில்., ஆரம்பத்தில் சாலையை ஆக்கிரமித்து ஒன்றிரண்டு குடிசை வீடுகள் கட்டப்பட்டது. ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்திற்காக வசிக்கிறார்கள் என இங்கிருந்தவர்கள் கண்டும் காணாமல் இருந்து விட்டனர். பிறகு நாட்கள் செல்லச்செல்ல வசதி படைத்த சிலரும் பொதுப்பாதையை ஆக்கிரமித்து குடிசை வீடுகள் கட்டி மாத வாடகைக்கு விடும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது. மிகவும் குறுகலான பகுதியில் நெருக்கமாக பல குடிசைகள் அடுத்தடுத்து கட்டப்பட்டுள்ளன. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் இங்கேயே தேங்கி விடுகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் டெங்கு கொசுக்கள் பாதிப்பால் இரவானால் நிம்மதியாக தூங்கக்கூட முடிவதில்லை. குடிசைப் பகுதியாக இருப்பதால் அதிக மின் அழுத்தத்தாலோ அல்லது மின்கசிவாலோ ஏதேனும் மின் விபத்து ஏற்பட்டால் சுற்றியிருக்கும் பல வீடுகள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதுகுறித்து இப்பகுதி வார்டு கவுன்சிலர் முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை பலரிடமும் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையிலும்,மாநகர நலன் சார்ந்த விஷயங்களிலும் துடிப்புடன் செயல்படும் இளம் திருச்சி மாநகராட்சி ஆணையரான பொன்மணி ஐ.ஏ.எஸ். இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்தி தரவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.